முகப்பு / பிரதமர் லீ சியன் லூங்கின் உரை

பிரதமர் லீ சியன் லூங்கின் உரை

2 பெப்ரவரி 2019-இல் நடைபெற்ற மெர்டேக்கா தலைமுறை பாராட்டு விழாவில் பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய உரை.


நண்பர்களே, சக மெர்டேக்கா தலைமுறையினரே. இன்று, மெர்டேக்கா தலைமுறையினரைக் கௌரவிக்க, இங்கு உங்களுடன் கூடியிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இன்று நாம் கரையோரப் பூந்தோட்டங்களில் கூடியிருப்பது பொருத்தமானதே. நமது முன்னோடித் தலைவர்கள், நகர மையத்தில் ஒரு பூந்தோட்டத்தைக் கொண்ட அழகிய, துடிப்புமிக்க புதிய நகரமாக சிங்கப்பூரைக் கற்பனை செய்திருந்தனர். அதனால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நாம் கடலிலிருந்து நிலத்தை மீட்டு, புதிய நகர மையத்தை உருவாக்கி, அந்தக் கற்பனையை நனவாக்கினோம். சதுப்பு நிலத்திலிருந்து பெரும் நகரமாக மாறிய சிங்கப்பூரின் பயணத்தில், இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

இந்த சிங்கப்பூர்க் கதையைத்தான் மெர்டேக்கா தலைமுறையினர் வாழ்ந்தனர். நமது தலைமுறையினர் நல்ல வாழ்க்கைத்தொழில்களை உருவாக்கினர்; நமது குடும்பங்களை வளர்த்தெடுத்தனர்; நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். நம் வாழ்நாளில், நமது முயற்சிகளால் சிங்கப்பூர் மேலும் வலிமைபெற்றது; மேலும் செழிப்பானது; மேலும் ஒற்றுமையானது.

இன்று நம்மில் பெரும்பாலோர் 60 வயது மதிக்கத்தக்கவர்கள். சிலர் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளபோதும் நம்மில் பலர் இன்னும் வேலை செய்துகொண்டிருக்கிறோம். நாம் ஒன்றுசேர்ந்து சாதித்திருப்பதைத் திரும்பிப் பார்க்கும்போது சிறிதளவு மனநிறைவு கொள்ளலாம்.

நமது பயணம், எப்போதுமே உயர்வுகளையும் மேம்பாடுகளையும் கொண்டதாக இருக்கவில்லை. பின்னோக்கிப் பார்த்தால், சில நேரங்களில், எல்லா நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் கடந்துவருவதில் நாம் நிச்சயம் வெற்றிகண்டிருப்போம் என்பதுபோல் தோன்றியது. ஆனால் உண்மையில், அது ஒன்றும் சக்திவாய்ந்த கதாநாயகன் தோன்றும் திரைப்படம் அல்ல. வெற்றியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு நெருக்கடியும் திண்டாட்டமாகவும் போராட்டமாகவும் இருந்தன. நமது தீர்வுகள் சரியாக அமையுமா அல்லது விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும், சவால்களை எதிர்நோக்கக்கூடிய விடாப்பிடியும் ஒற்றுமையும் நம்மிடம் இருந்ததை நமக்கும் உலகத்துக்கும் நாம் நிரூபிக்கவேண்டியிருந்தது.

தொடக்க ஆண்டுகளே நாம் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய தருணங்களாக அமைந்தன. பல காரணங்களுக்காக 1965ஆம் ஆண்டு, நம் மக்களுக்கு மிக முக்கியத் தருணமாக அமைந்தது. ஒரே இரவில் மலாய் சிங்கப்பூரர்கள் சிறுபான்மையினர் ஆனார்கள். ஒரே இரவில் நமது வர்த்தகர்களும் தொழில்முனைவர்களும் மலேசிய வணிகச் சந்தையை இழந்தனர். ஒரே இரவில் உறவினர்கள் அரசியல் எல்லைகளால் பிளவுபட்டனர்.

மலேசியாவிலிருந்து பிரிந்துவந்த கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகளிலேயே, திட்டமிட்டதற்கு முன்னதாகத் தங்கள் படைகளை சிங்கப்பூரிலிருந்து மீட்டுக்கொள்ளப்போவதாய் பிரிட்டிஷார் அறிவித்தனர். கொந்தளிப்பான, நிலையற்ற ஒரு வட்டாரத்தில், பாதுகாப்பின்றி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் நாம் இருந்தோம். ஆனால், நாம் உறுதியுடன் தேசிய சேவையை ஆற்றி, சிங்கப்பூர் ஆயுதப் படையை விரைவில் மேம்படுத்தி, சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

இதற்கிடையில் நம்மைச் சுற்றிய வட்டாரத்தில், கடும் வியட்நாம் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. 1975இல், இறுதியாக வட வியட்நாம் வெற்றிபெற்றது – அது அமெரிக்கர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஒரு தோல்வி. லாவோஸும் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்தது. கம்போடியாவும் கம்யூனிஸ்ட் நாடானது. மீதமுள்ள தென்கிழக்காசிய நாடுகள் கம்யூனிஸத்தைக் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் அஞ்சினோம். அதிர்ஷ்டவசமாக, ஆசியான் ஒன்றிணைந்து அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுத்தது.

அண்மை நிகழ்வாக நினைவில் இருப்பது 11 செப்டம்பர் 2001. நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அல் கயிடாவுக்குத் தொடர்புடைய ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாதக் குழு நமக்கு மத்தியில் இருந்துகொண்டு, இதுபோன்ற தாக்குதல்களை இங்கு நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருந்ததை அறிந்தபோது சிங்கப்பூரர்கள் உண்மையில் அதிர்ந்துபோயினர். நமது பாதுகாப்புக்கு மட்டுமின்றிச் சமய நல்லிணக்கத்துக்கும் தேசிய பிணைப்புக்கும் இது ஒரு கடும் உள்நாட்டு மிரட்டலாக அமைந்தது. ஆனால், நாம் சிதைந்துவிடவில்லை. ஒரு தேசமாக ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளித்துப் பிரச்சினையை அதன் ஆணிவேரிலேயே எதிர்கொண்டோம்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த ஈராண்டுகளுக்குப் பிறகு, சார்ஸ் நோய் மூலமாக, எதிர்பாரா திசையிலிருந்து ஆபத்து வந்தது. அச்சமும் கவலையும் தேசத்தை உலுக்கின. சிங்கப்பூர் கிட்டத்தட்ட ஒரு முடக்கநிலையை அடைந்தது. மக்கள் வேலைக்குச் செல்லவும், தொடர்ந்து செயல்படவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவவும் துணிவும் கட்டுப்பாடும் தேவைப்பட்டன. அங்கீகாரம் பெறாத இத்தகையோரில் பலர் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

நீங்கள் வேலை செய்த நாட்களில், சிங்கப்பூர் பெரிய அளவிலான பொருளியல் நெருக்கடியையும் சந்தித்தது. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை, நாம் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கினோம். 1973இல் எண்ணெய் நெருக்கடியால், பணவீக்கம் மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. ஓராண்டில், விலைகள் 20% அதிகரித்தன. அந்த நேரத்தில் குடும்பங்களுக்கான வாழ்க்கைச் செலவுகள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.

1985இல் முதல் முறையாக, நாம் பெரிய அளவிலான பொருளியல் மந்தநிலையால் பாதிக்கப்பட்டோம். நாம் நம் பொருளியலை மேம்படுத்திவந்துகொண்டிருந்தோம். குறைந்த சம்பளத் தொழில்துறைகளை, உயர்ச் சம்பள, திறன் வாய்ந்த தொழில்துறைகளாக மாற்றினோம். இருப்பினும், இவ்வாறு செய்துகொண்டிருந்த வேளையில், வர்த்தகச் செலவுகள் மிக அதிகமானதால், நாம் நம் போட்டித்தன்மையை இழந்தோம். நாம் சுலபமான வழியை எடுக்கவில்லை. செலவுகளைக் குறைக்க, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். மத்திய சேமநிதிக் கணக்கில் முதலாளிகள் போடும் பங்களிப்புகளைப் பெரிய அளவில் குறைத்தது, அவற்றுள் ஒன்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாம் ஆசிய நிதி நெருக்கடியைச் சந்தித்தோம். நம்மைச் சுற்றிய பொருளாதாரங்கள் – தாய்லந்து, இந்தோனேசியா, மலேசியா முதலியவை சரிவை எதிர்நோக்கிக்கொண்டிருந்தன. நாமும் அவற்றைப் போல் எளிதில் சரிந்திருக்கலாம். ஆனால், நாம் முக்கியமான முடிவுகளை எடுத்தோம். மத்திய சேமநிதிக் கணக்கின் பங்களிப்புகளை மீண்டும் குறைத்தோம்; எதிர்காலத்திற்குத் தயார்படுத்த, ஊழியர்ப் பயிற்சிகளுக்கு ஆதரவளித்தோம். அதன் காரணமாக, நாம் நம்பிக்கையை மட்டும் கட்டிக்காக்கவில்லை; சுமூகமான பொருளியல் நிர்வாகத்திற்கும், பொறுப்பான ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களிடையே சிங்கப்பூரின் நற்பெயரையும் வலுப்படுத்தினோம்.

2008இல், உலக நிதி நெருக்கடி. எங்கும் நிதிச் சந்தைகள் முடங்கின. வர்த்தகமும் தொழிலும் சரிந்தன. தொழில்களுக்கு உதவவும், வேலைகளைப் பாதுகாக்கவும், நாம் கவனமாக உருவாக்கிவந்த நிதி இருப்புகளிலிருந்து பணம் எடுக்கவேண்டியதாயிற்று.

நேரம் போக போக, அந்தக் கசப்பான நினைவுகளும் மறையத் தொடங்கின. ஆனால், இவையெல்லாம் மெர்டேக்கா தலைமுறையினரை அடையாளங்காண வைத்த தருணங்கள். நாம் அவர்களை நினைவுகூருவதற்கான தருணம். காரணம், ஒவ்வொரு முறையும், மெர்டேக்கா தலைமுறையினர் உறுதியுடன் பிரச்சனைகளைச் சந்தித்து, அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, தேவைப்படும்போதெல்லாம், நம்மை மீண்டும் வலிமையாக்கிய கசப்பான தருணங்களை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு முறையும், நாம் ஒன்றிணைந்து அந்தச் சவாலை எதிர்கொண்டோம்.

நாம் எதையெல்லாம் இழப்போம் என்பதைப் புரிந்துகொண்டதால், மெர்டேக்கா தலைமுறையினர் இவற்றையெல்லாம் செய்தனர். 1950கள், 1960களின் தொடக்கம் மற்றும் மலேசியாவில் இருந்த ஆண்டுகளில், சுதந்திரப் போராட்டத்தின்போது நாம் பெரிய அளவிலான மாற்றங்களைக் கடந்து வந்தோம். நம் பெற்றோரின் அனுபவங்களை நாம் பார்த்தோம். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, தொடர்ந்து சிங்கப்பூரை வளர்க்கவேண்டும் என உறுதியோடு இருந்தோம்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, சிங்கப்பூர் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நாம் காணலாம். முன்பு கடலாக இருந்து, இன்று நம் நகரத் தோற்றத்தின் ஒரு முக்கியக் கூறாக விளங்கும் மரினா பே பகுதியை நாம் பார்க்கிறோம். நம் தொடக்ககால வீடமைப்புப் பேட்டைகளில் இருந்த பத்து மாடி அடுக்கு வீடுகளையும், தண்ணீர் விநியோகமும் நவீனக் கழிப்பிட வசதிகளும் அற்ற கம்பத்து வீடுகளையும் ஒப்புநோக்க, நவீன வீவக வீடுகள் எவ்வளவோ முன்னேறியுள்ளன. நம் தலைமுறை சிறிதும் அனுபவிக்காத எவ்வளவோ கல்வி வாய்ப்புகளை நம் பேரப்பிள்ளைகள் அனுபவிக்கின்றனர். நம் பொருளியல் மேலும் துடிப்பானதாகவும், நம் நிறுவனங்கள் மேலும் செழிப்பானவையாகவும், நம் வேலைகள் மேலும் மனநிறைவளிக்கும் வகையிலும் உள்ளன. நம் சமூக அமைப்புமுறை மேலும் வலுப்பெற்றுள்ளது; நம் பன்முகத்தன்மை கொண்டாடப்படுகிறது; நாம் ஒன்றுபட்ட மக்களாக, வலுவாக நிற்கிறோம். இதைச் சாத்தியமாக்கியதில் மெர்டேக்கா தலைமுறைக்குப் பெரும்பங்குண்டு.

மெர்டேக்கா தலைமுறை, தற்போது ஒரு தலைமுறை மாற்றத்தை எதிர்நோக்குகிறது. ஆனால், சிங்கப்பூரின் பயணம் தொடர்கிறது. நம் பொருளியலைப் போட்டித்தன்மையுடன் வைத்திருப்பது, மூப்படையும் மக்கள்தொகைக்குத் தயாராவது, சமுதாய முன்னேற்றத்தைக் கட்டிக்காப்பது போன்ற புதிய சவால்களை நாம் சந்திக்கிறோம். மேலும் பல சவால்கள் நிச்சயம் தோன்றும்.

சிங்கப்பூரர்கள் அவற்றை அலட்சியமாய்க் கருதக்கூடாது; ஏனெனில், வெற்றிக்கு என்றுமே உத்தரவாதம் இல்லை. இருப்பினும், நாம் மனம் தளரவேண்டிய அவசியமும் இல்லை. மெர்டேக்கா தலைமுறை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்ததுபோல், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒரு மக்களாகப் பாடுபட்டால், இச்சவால்களை சிங்கப்பூரால் நிச்சயம் சமாளிக்க முடியும்.

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த நீங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் உயிர்வாழ்வுக்கான விழுமியங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுத்தந்தால், சிங்கப்பூருக்கு மேலும் ஒருவகையில் சிறந்த சேவையாற்றியவர்கள் ஆவீர்கள். உங்களுக்கிருந்த சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல், மனவுறுதி, கடமையுணர்வு – இந்த மெர்டேக்கா உணர்வு - எதிர்காலத் தலைமுறையினருக்கும் இருக்குமானால், சிங்கப்பூர் தொடர்ந்து சாதிக்கும்.

நம் தேசம் உருவாக, மெர்டேக்கா தலைமுறையினராகிய நீங்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு உங்களைக் கௌரவிப்பது சரியானது, பொருத்தமானது. இங்குள்ள உங்கள் அனைவருக்கும், சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள மெர்டேக்கா தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி!

சென்ற ஆண்டின் தேசிய தினக் கூட்ட உரையில், மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் ஒன்றை நாம் உருவாக்கவிருப்பதாக நான் அறிவித்தேன். சுதந்திரம், அரசுரிமை என மெர்டேக்காவுக்காக நாம் போராடிய காலகட்டமான 1950களில் பிறந்தவர்களுக்கான திட்டம் இது. 1949 அல்லது அதற்குமுன் பிறந்து, முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டத்துக்குத் தகுதிபெறாதவர்கள், 31 டிசம்பர் 1996க்குள் குடியுரிமை பெற்றிருந்தால், அவர்களும் திட்டத்துக்குத் தகுதிபெறுவர்.

அமைச்சர் ஹெங் சுவீ கியாட்டும் அமைச்சர் கான் கிம் யோங்கும் இதுகுறித்த விவரங்களை இம்மாதப் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் அறிவிப்பர். ஆகவே, முந்திக்கொண்டு நான் எதையும் சொல்லப்போவதில்லை. ஆனாலும், இரகசியங்கள் எதையும் வெளியிடாத வகையில், இது உங்கள் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க உதவும் ஒரு கணிசமான தொகுப்புத்திட்டம் என்பதையும் மெர்டேக்கா தலைமுறைக்கு தேசத்தின் நன்றிக்கடனைத் தெரிவிக்கும் ஒன்று என்பதையும் என்னால் சொல்லமுடியும்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்கள் அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
நன்றி.